கடவுள் இருக்கின்றானா
என்ற சந்தேகம்
நேற்று வரையில்
இருந்தது

கனகச்சிதமாக
உன்னை பார்த்தபின்
நம்புகிறேன்
கடவுள் இருக்கிறான்

இல்லையென்றால்
இத்தனை அழகோடு
நீ இருக்க
சாத்தியமில்லை

தனிமை

தனிமையில் மௌனம்

தனிமையின் மௌனத்தில்
உன் நினைவுகள்

தனிமையில் மௌனத்தில்
உன் நினைவுகளுடன்
நான்

இதைவிட வேதனை
என்ன உண்டு- எனக்கு
இந்த உலகில்?

உயர்ந்த மலைத்தொடர்
அடிவாரத்தில் அடர்ந்தக் காடு
அதில் ஓடும் நதிகள்
பச்சைப் புல்வெளி
நடுவில் ஒரு குளம்

வெயிலில் குளுமையும்
பனிக் காலத்தில் உஷ்ணமும்
வழங்கும் அழகிய குடிசை

பசிக்கு கனி, காய், காய்கறி
தாகத்துக்கு சுத்தமான ஆற்று நீர்
படுத்துப் புரள புல்வெளி
ஓடி விளையாட மர நிழல்

பசு, காளை, ஆடு, கோழி
மான், மயில், பறவைகள்
நாய், பூனை
புடைசூழ

கூப்பிடும் தூரத்தில்
உற்றார், உறவுகள்
சுற்றத்தார், நண்பர்கள்
கூப்பிடத் தேவையில்லாத
பாதுகாப்பான வாழ்க்கை

அன்பும் காதலும்
பொங்கி வழியும் இந்த
அழகிய வாழ்க்கையை
தொலைத்துவிட்டு

ஆணவமும், அதிகாரமும்
கலந்து கட்டிய
சிமெண்ட் கல்லறையில்
வாழ்கிறார்கள்

பாவம் மனிதர்கள்
அறிவுகள் ஆறாம் - இன்னும்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவன் பேதம் பார்ப்பதில்லை
இயற்கை பேதம் பார்ப்பதில்லை
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்

பசி, தாகம், தூக்கம்
அனைவருக்கும் உண்டு
பிறப்பும் இறப்பும்
அனைவருக்கும் சமமே

நோய்களும், மரணமும்
இன்பமும், துன்பமும்
சலுகைகள் வழங்குவதில்லை

சூரியன் அனைவரையும் சுடும்
நிலா அனைவரையும் காயும்
மழை அனைவரையும் ஈரமாக்கும்
நிலம் அனைவரையும் தாங்கும்

சுனாமி வந்தது
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்
அனைவரும் சமமாக
மிதந்தனர் பிணமாக

நிலநடுக்கம் வந்தது
கோயில், மசூதி
தேவாலயம், புத்தவிகாரம்
என எந்த பேதமும் இன்றி
சிதைந்து வீழ்ந்தன
மண்ணின் மீது

இயற்கை பேதம் 
பார்ப்பதில்லை
சலுகைகள் 
வழங்குவதில்லை

வெள்ளம் வந்தது
அலையா விருந்தாளியாக
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வீட்டிலும்

கோயிலின் பூசாரி
மசூதியின் இமாம்
தேவாலயத்தின் ஆயர்
புத்ததுறவிகள்

யாருக்கும் சலுகையில்லை
இன்பமும், துன்பமும்
நோயும், மரணமும்
அனைவருக்கும் சமமே

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
யாருக்கும் சலுகையில்லை

அனைவரையும்
துப்பாக்கிகள் சுடும்
அருவாள்கள் வெட்டும்
விஷங்கள் கொள்ளும்

அனைவருக்கும்
பிறப்பு முதல்
இறப்பு வரையில்
ஒரே நியதிதான்

நீ எதில் உயர்ந்தவன்?
உன் மதம் எதில் உயர்ந்தது?

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வாயிலும்
மண்ணள்ளி தான் போடுவார்கள்
இறந்த பின்பு

அனைவர் உடலும்
மண்ணுக்குத்தான்
இரையாகும்

கண்டிப்பாக மரணமடையும் 
மனிதர்கள் - உயிர் 
பிரியும் வரையிலாவது
உயிரோடு இருக்கலாமே

நீ எதை வேண்டுமானாலும்
நம்பிக்கை கொள்
நீ எதை வேண்டுமானாலும்
வழிபாடு செய்

பயணங்கள் வெவ்வேறாக
இருக்கும்போது
பாதைகள் வெவ்வேறாக
தானே இருக்கும்

உன் வழி உனக்கு
அவர் வழி அவருக்கு

மதங்கள் மனிதர்களை
காக்க வேண்டுமே ஒழிய
மனிதர்கள் மதங்களை
காக்கத் தேவையில்லை

கடவுள் நம்பிக்கை 
உள்ளவன்தான்
அடுத்த கடவுள் 
நம்பிக்கையாளனை
கொல்கிறான் - கடவுளின்
பெயர்கள் மாறுபடுவதால்

ஆதியும் அந்தமும் இல்லா
அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகன்
இறைவன்

அவனுக்கு பல பெயர்கள்
இருக்கக் கூடாதா?
இறைவனை ஏன் - ஒரு
கூட்டுக்குள் அடைகிறீர்கள்?
முடியுமா உங்களால்?

கடவுளின் பெயரால்
மனிதர்கள் செய்யும்
அயோக்கியத்தனங்கள்
கடவுளுக்கே பொறுக்காது

உலகத்து ஜீவராசிகளில்
மிகவும் - முட்டாளானது
மனித இனம்தான்

இறைவன் செய்த
மிகப்பெரிய தவறு
மனிதர்களைப் படைத்ததுதான்

மனிதர்களின்
ஆறாம் அறிவு
வரமல்ல சாபம்

விலங்குகளை பார்த்தாவது
வாழப் பழகிக்கொள்ளுங்கள்

அன்புடன் இருப்பது மட்டுமே
நீ மனிதன் என்பதற்கு
அத்தாட்சி

இது பாகுபலியின் காதல்
பல்வால் தேவனின் காதல்
தேவசேனையின் காதல்

அவளின் அழகு, வீரம், வாள்வீச்சு
வாளினும் கூரிய
கண்களைக்கண்டு
காதலுற்றான் பாகுபலி
தேவசேனையின் மீது

அவன் வனப்பு, வீரம்
அவன் திறமைக்கண்டு
காதலுற்றாள் தேவசேனை
பாகுபலியின் மீது

அவள்
யார் என்று தெரியாது
எப்படி இருப்பாள் புரியாது
சித்திரம் மட்டும் கண்டு
காதலுற்றான் பல்வால் தேவன்
தேவசேனையின் மீது

இந்த மூன்றில் - எது
உயரிய காதல்?

பாகுபலி விரும்புகிறான்
என்று சந்தேகம் இருந்தும்
காதல்க் கொண்டான் - இது
அவன் தவறா?

மனதை கட்டுப்படுத்த
எவரால் முடியும்?

அண்ணனாக, அவன் கெட்டவன்
மகனாக, அவன் கெட்டவன்
காதலனாகவே வாழ்ந்தான்
இறுதிவரையில்

அவளைப் பார்த்துக்கொண்டே
அவள் நினைவில்
அவள் நிழலில்
இறுதி நாள் வரையில்

தேவசேனையைத்தவிர
வேறுறொரு பெண்ணை
மனதிலும் நினைக்காதவன்
திருமணமும் செய்யாதவன்
அவளுக்காகவே வாழ்ந்தான்

இது பல்வால் தேவனின் காதல்
உண்மையான காதல்
பாகுபலி இருக்கும் வறையில்
அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை
அவர்களை பிரிக்கவும் எண்ணவில்லை

பாகுபலி இறந்த பின்பும்
எல்லா வாய்ப்பிருந்தும் - அவளை 
அனுபவிக்க நினைக்கவில்லை
அவளை அடையத் துடிக்கவில்லை
தவறாகவும் நடக்கவில்லை

அவளை பார்த்துக்கொண்டே வாழ்ந்தான்
அவளின் இருப்பு ஒன்றே
போதுமானதாக இருந்தது
அவனுக்கு

அவன் அன்பு
கொடூரமானதாக இருக்காலாம்
அதை வெளிப்படுத்திய விதம்
தவறாக இருக்கலாம் – ஆனால்
அவன் காதலில் தப்பில்லை

வா ஒன்றாக செத்துப் போகலாம்
என்ற ஒற்றை வசனம்
பல்வால் தேவன் உரித்தது

அவன் காதலை
புரிந்து கொள்ள கடைசி வாய்ப்பு
தேவசேனைக்கு

இது பல்வால் தேவனின் காதல்
உண்மையான காதல்
இறுதிவரையில்
புரிந்து கொள்ளவில்லை - அவள்
அவன் காதலை

அவளுக்காகவே வாழ்ந்தான்
அவளாலேயே வாழ்ந்தான்
அவளைப் பார்த்துக்கொண்டே
உயிர் துரந்தான்

மறுபடியும் பிறப்பான்
அவளுக்காக காத்திருப்பான்
அடுத்த ஜென்மத்திலாவது
அவள் புரிந்துகொள்வாளா?
அவன் உண்மைக் காதலை?

இது பல்வால் தேவனின் காதல்
உண்மையான காதல்

பாகுபலி 2 திரைப்படத்தை இரண்டாவது முறையாகப் பார்க்கும் போது, கடைசிக் கட்டத்தில் பல்வால் தேவன், தேவசேனையைப் பார்த்து, வா ஒன்றாக செத்துப் போகலாம் என்று கூரிய வசனம். என் மனதை அதிகம் பாதித்தது. பல்வால் தேவனுக்காக, அவன் காதலுக்காக இந்த கவிதை.

"டமிலை" மட்டுமே கேட்டு
பழகியவன் - முதன் முதலாக
தமிழை செவிமடுக்கிறேன்
உன் மலர்வாயிலிருந்து

காய்ந்த பாலைவனத்தில்
அருவி பெருக்கெடுத்து
ஓடியது

பாலைவனம்
முதன் முதலாக
நீர்வீழ்ச்சியைக் கண்டது

தமிழின்  அருஞ்சுவையையும்
இப்போதுதான் சுவைக்கிறேன்

உன் வாய் மொழிவதால்
இனிப்பு மட்டும் சற்று
தூக்கலாக இருக்கிறது

வானம் கருக்கவில்லை
மேகமூட்டமும் இல்லை
மழைக்கான அறிகுறிகளும்
இல்லை  - ஆனால்
வானில் ஒய்யாரமாக
ஒரு வானவில்
வாய்பிளந்து நிற்கிறது

வீதியில் நடந்துவரும் உன்னை
வேடிக்கைப் பார்க்கிறதோ?