நீ உயிர்வாழக் காரணம்

தனிமையில் இருக்கையில்
எவர் நினைவுகள்
அலைபாய்கிறதோ

இயற்கையின்
ஒவ்வொரு அசைவுகளும்
யாரை நினைவு படுத்துகிறதோ

இளையராஜாவின்
காதல் பாடல்கள்
யார் முகத்தை
நினைவு படுத்துகிறதோ

காலையில் எழுகையிலும்
இரவு உறங்குகையிலும்
யாரின் நினைவுகள்
வந்து போகிறதோ

வாழ்க்கையின்
மகிழ்ச்சியான நாட்களிலும்
துன்பமான நாட்களிலும்
யாரின் நினைவுகள்
நிழலாடுகின்றதோ

நீ வாசித்த கவிதையை
அடுத்ததாக - யார்
வாசிக்க வேண்டுமென
விரும்புகிறாயோ

நீ படித்து சிரித்த
நகைச்சுவை துணுக்குகளை
யாருடன் பகிரவேண்டும்
என்று மனம் துடிக்கிறதோ

நீ அனுபவிக்கும் இன்பங்களை
யாருடன் பகிர்ந்து கொள்ள
மனம் விரும்புகிறதோ

நீ ரசித்த சினிமா காட்சி
நீ ரசித்தப் பாடல்
நீ ரசித்த நகைச்சுவை
யாரை நினைவு படுத்துகிறதோ

அவளை / அவனை
எந்த காரணத்தைக் கொண்டும்
எதற்காகவும் இழந்துவிடாதே

விதிவசத்தால்
ஒருவேளை இழந்தாலும்
மறந்து விடாதே

உன் ஜீவனில்
முழுமையாக குடிகொண்டிருக்கும்
அவளோ அவனேதான்
நீ உயிர்வாழக் காரணம்