என் உயிராய் ஓடுவது நீதான்

காக்கைக் கூட்டத்தில்
வெண் புறாவாய் - உன்
கருங்கூந்தலில் எட்டிப்பார்க்கும்
ஒற்றை வெண்ணரை

பட்டைத்தீட்டாத வைரமாய்
மெல்ல மங்கும் – உன்
கண்பார்வை

வெயிலைத் தாங்காத
ரோஜா இதழாய் - மெல்ல
காய்ந்த உன் இதழ்கள்

இரண்டு மூன்று என
திரும்பச் சொல்ல கேட்கும்
உன் செவிகள்

உன் இளமையை
வருடங்கள் மெல்லத்தின்று
முதுமை எட்டிப்பார்க்கும் போது

துள்ளிக் குதித்து
நடந்த நீ – நடைதளர்ந்து
கைதாங்கல் இருந்தால்
நன்று என எண்ணும் போது

எனக்கென யாருமில்லை
என்ற எண்ணம் தோன்றி
சாய்ந்து அழ - தோள் ஒன்றை
உன் மனம் தேடும் போது

மெத்தையும் தலையணையும்
போதாது - நிம்மதியாய் சாய
தோள் வேண்டுமென - உன்
மனம் நினைக்கும் போது

என்றும் மறவாதே
எந்தச் சூழ்நிலையிலும் – நான்
இருக்கிறேன் உனக்காக

நான் காதலித்தது
உன்னைத்தான்
முழுமையாக உன்னைத்தான்

உன் உடலை அல்ல
உயிர் உடலில் தேங்கும்
நாள் வறையில் - என் 
உயிராய் ஓடுவது நீதான்
நான் சுவாசிப்பதும்
உன் நினைவுகளைத்தான்

உலகமே உன்னைக் கைவிட்டாலும்
நான் இருக்கிறேன் என்றும் உனக்காக
உனக்காக மட்டுமே

ஆனால் உனக்கு
என் நினைவுகள் தோன்றுமா?

No comments:

Post a Comment